பா.ஜனதா மாவட்ட தலைவர் உள்பட 3 பேர் கைது


பா.ஜனதா மாவட்ட தலைவர் உள்பட 3 பேர் கைது
x

திருவாரூரில், பல்கலைக்கழக தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக பா.ஜனதா மாவட்ட தலைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்


திருவாரூரில், பல்கலைக்கழக தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக பா.ஜனதா மாவட்ட தலைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பல்கலைக்கழக தேர்வு

திருவாரூர் கிடாரங்கொண்டானில் உள்ள திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் கடந்த 5-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த தேர்வு ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் மட்டும் நடக்கிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் பி.ஏ. பொலிடிகல் சயின்ஸ் பாடத்திற்கான தேர்வு நடந்தது. அப்போது தேர்வு அறையில் இருந்த பேராசிரியர், தேர்வு எழுதும் மாணவர்களின் ஹால் டிக்கெட்டை சரி பார்த்துள்ளார். இதில் பாஸ்கர் என்பவருக்கு பதிலாக வேறு ஒருவர் தேர்வு எழுத வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணை

இதை தொடர்ந்து அந்த வாலிபரை தனி அறையில் வைத்து விசாரித்த போது அவர், திருவாரூர் மடப்புரம் சபாபதி தெருவை சேர்ந்த மாதவன் மகன் திவாகர் (வயது 29) என்பதும், பாஸ்கர் என்பவருக்கு பதிலாக இவர் தேர்வு எழுத வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், கல்லூரிக்கு வந்து திவாகரிடம் விசாரணை நடத்தினர்.

ஆள்மாறாட்டம்

விசாரணையில் அவர், உடற்கல்வி ஆசிரியர் படிப்பு படித்து முடித்து விட்டு தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வந்ததாகவும், தன்னை திருவாரூர் கூடூர் பகுதியை சேர்ந்த பா.ஜனதா மாவட்ட கல்வியாளர் பிரிவு செயலாளர் ரமேஷ்குமார் என்பவர் தேர்வு எழுத அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தார்.இதனையடுத்து போலீசார், ரமேஷ்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் திருவாரூர் மாவட்ட கூத்தாநல்லூர் தோட்டச்சேரியை சேர்ந்த பா.ஜனதா மாவட்ட தலைவர் பாஸ்கர் (48) என்பவருக்கு பதிலாக தேர்வு எழுத திவாகரரை ஏற்பாடு செய்து ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக்கொண்டார்.

பா.ஜனதா தலைவர் உள்பட 3 பேர் கைது

இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் ஆள்மாறாட்டம், மோசடி உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து திவாகர், ரமேஷ்குமார் மற்றும் பா.ஜனதா மாவட்ட தலைவர் பாஸ்கர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இந்த நிலையில் பாஸ்கருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பரபரப்பு

பல்கலைக்கழக தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக பா.ஜனதா மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story