கருவேப்பிலங்குறிச்சி அருகே பட்டாசு வெடித்து 3 பேர் படுகாயம்
கருவேப்பிலங்குறிச்சி அருகே பட்டாசு வெடித்து 3 பேர் படுகாயம் அடைந்தனா்.
கருவேப்பிலங்குறிச்சி,
கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கார்மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் விருத்தாசலம் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இவரது தாய் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்.
இதற்காக துக்கம் விசாரிக்க மணிகண்டனோடு பணி செய்து வரும் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள தேத்தான் பட்டு கிராமத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் கல்யாண்குமார் (49), கண்டக்டரான பெரியகோட்டுமுனை பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் (34), ஸ்ரீமுஷ்ணம் நாச்சியார் பேட்டை பகுதியை சேர்ந்த பேருந்து பணிமனை ஊழியர் அண்ணாதுரை (54). ஆகிய மூன்று பேரும் விருத்தாசலத்தில் இருந்து மலர் மாலைகள் மற்றும் பட்டாசுகளை வாங்கிக் கொண்டு வந்தனர்.
அப்போது அங்கு சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக இவர்கள் வாங்கிக் கொண்டு வந்த பட்டாசில் தீப்பொறி பட்டு கையில் இருந்த வெடிகள் அனைத்தும் வெடித்து சிதறியது.
இதனால் பலத்த காயமடைந்த மூன்று பேரையும் அப்பகுதியினர் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.