மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 பேர் படுகாயம்
நாலாட்டின்புத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாலாட்டின்புத்தூர்:
நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள வானரமுட்டி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சந்தனசுப்பு மகன். பிரத்திவிராஜ் (வயது 24). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கோவில்பட்டியில் இருந்து வானரமுட்டியை நோக்கி மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது வானரமுட்டி அருகே வரும்போது திடீரென நிலை தடுமாறி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த பிரத்திவிராஜ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். மோட்டார் சைக்கிள் மோதியதில் திண்டுக்கல் மாவட்டம் மாஸ்கரை பகுதியை சேர்ந்த முருகன் மகன் சிலம்பரசன் (31), அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் வல்லரசு (27) ஆகிய இருவரும் காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த நாலாட்டின்புத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்த 3 பேரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.