வனப்பகுதியில் பதுக்கி வைத்த 3 பேர் கைது
கர்நாடகாவில் யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் வனப்பகுதியில் தந்தங்களை பதுக்கி வைத்ததாக மேலும் 3 பேரை கர்நாடகா வனத்துறையினர் கைது செய்தனர்.
கூடலூர்,
கர்நாடகாவில் யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் வனப்பகுதியில் தந்தங்களை பதுக்கி வைத்ததாக மேலும் 3 பேரை கர்நாடகா வனத்துறையினர் கைது செய்தனர்.
தந்தங்கள் பறிமுதல்
கர்நாடகா மாநிலம் குண்டல்பெட் அருகே பசவன்பூர் பகுதியில் சந்தேகப்படும்படி சிலர் நடமாடுவதாக பந்திப்பூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்று வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த சுற்றுலா காரை சோதனை செய்தனர். அதில் 2 யானை தந்தங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து நடத்திய விசாரணையில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானையிடம் இருந்து தந்தங்களை சிலர் உதவியுடன் கடத்தி சென்று விற்பதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து மசினகுடியை சேர்ந்த ரங்கசாமி (வயது 35), சஜீவகுமார் (38), ஊட்டியை சேர்ந்த வினோத் (36), கோவையை சேர்ந்த கதிரேசன் (45), திருப்பூரை சேர்ந்த செல்வநாயகம் (44) ஆகிய 5 பேரை கைது செய்தனர். பின்னர் 2 தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் 3 பேர் கைது
இதுதொடர்பாக பந்திப்பூர் வனத்துறையினர் கொடுத்த தகவலின் பேரில் சிங்காரா வனச்சரகர் ஜான் பீட்டர் தலைமையிலான வனத்துறையினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மசினகுடியை சேர்ந்த அசோக் (28), அர்ஜுனன் (21), பாலன் (25) ஆகிய 3 பேரிடம் விசாரணை ேமற்கொள்ளப்பட்டது. இதில் அவர்கள் 3 பேரும் சொக்கநல்லி வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானையின் தந்தங்களை வெட்டி எடுத்து வனப்பகுதியில் பதுக்கி வைத்து உள்ளனர்.
பின்னர் ரங்கசாமி மூலம் கடத்தி சென்று விற்பனை செய்வதற்காக கர்நாடகாவுக்கு அனுப்பி வைத்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அசோக், அர்ஜுனன், பாலன் ஆகிய 3 பேரை கர்நாடகா வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து கர்நாடக வனத்துறையினர் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.