6 டன் ரேஷன் அரிசி பதுக்கிய 3 பேர் கைது
6 டன் ரேஷன் அரிசி பதுக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரேஷன் அரிசி பதுக்கல்
திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் இருந்து கரியமாணிக்கம் செல்லும் சாலையில் உள்ள ஒரு குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தமிழக உணவு கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கூடுதல் டி.ஜி.பி. காமினி அறிவுரையின்பேரில், திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பந்தப்பட்ட குடோனுக்கு சென்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கிருந்த 3 பேர் தப்பி ஓட முயன்றனர். உடனடியாக போலீசார் 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், திருச்சி தாராநல்லூரை சேர்ந்த முருகன் (வயது 47), மண்ணச்சநல்லூரை சேர்ந்த விக்னேஷ் (24) மற்றும் கவின்குமார் (23) என்பதும், பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி குருணையாக அரைத்து மாட்டு தீவனத்துக்காக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
3 பேர் கைது
இதைத்தொடர்ந்து அந்த குடோனில் சோதனை மேற்கொண்ட போது, அங்கு சட்டவிரோதமாக சுமார் 6 டன் ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக கட்டி பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவற்றில் ஒரு டன் ரேஷன் அரிசி குருணையாக அரைத்து வைக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 6 டன் ரேஷன் அரிசியையும் போலீசார் கைப்பற்றினார்கள். இதுதொடர்பாக உணவு கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை கடத்த பயன்படுத்திய 2 நான்கு சக்கர வாகனங்கள், 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.
சிறையில் அடைப்பு
பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் திருச்சி 6-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சிவக்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.