ஆடுகளை திருடி ஆட்டோவில் கடத்திய 3 பேர் கைது
மெஞ்ஞானபுரம் அருகே ஆடுகளை திருடி ஆட்டோவில் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள தைலாபுரத்தைச் சேர்ந்த அலிஷ் பிரபாகர் என்பவருடைய மனைவி ஏஞ்சலின் மேரி (வயது 33). இவர் ஆடுகள் வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் ஏஞ்சலின் மேரியின் ஆடுகள் அவரது வீட்டின் அருகே மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு ஆட்டோவில் வந்த ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி பகுதியைச் சேர்ந்தவர்களான இசக்கிமுத்து (27), முத்துக்குமார் (23), முத்தண்ணா (19) ஆகிய 3 பேரும் ஏஞ்சலின் மேரியின் ஆட்டை திருடி ஆட்டோவில் கடத்தி செல்ல முயன்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த ஏஞ்சலின் மேரி மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் 3 பேரையும் பிடித்து மெஞ்ஞானபுரம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிமுத்து, முத்துக்குமார், முத்தண்ணா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஆடு மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.