அரசு அதிகாரிகளை தாக்கிய 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருத்துறைப்பூண்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்ட போது அரசு அதிகாரிகளை தாக்கிய 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கொரடாச்சேரி:
திருத்துறைப்பூண்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்ட போது அரசு அதிகாரிகளை தாக்கிய 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருத்துறைப்பூண்டி அருகே கொற்கை ஊராட்சியில் உள்ள நீர்நிலை புறம்போக்கு இடங்களில் உள்ள வீடுகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி கோட்டாட்சியர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு அதிகாரிகள் பொக்லின் எந்திரம் மூலம் நீர்நிலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
அதிகாரிகள் மீது தாக்குதல்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே பகுதியை சேர்ந்த ரஜினிகாந்த், மணிகண்டன், மாதவராஜன் ஆகிய 3 பேரும் அரசு அதிகாரிகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்ற பயன்படுத்திய பொக்லின் எந்திரங்கள் மீது கற்களை வீசி தாக்கினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
இந்தநிலையில் 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் அவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார். இதனால் 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதையடுத்து ரஜினிகாந்த், மணிகண்டன், மாதவராஜன் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.