முன்விரோதத்தில் தந்தை, மகள்களை தாக்கிய 3 பேர் கைது
வடமதுரை அருகே முன்விரோதத்தில் தந்தை, மகள்களை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடமதுரை அருகே உள்ள பிலாத்து பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 50). இவர், திண்டுக்கல் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் வீராச்சாமி (42). இவருக்கும், சின்னச்சாமிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று காலை சின்னச்சாமி வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வீராச்சாமி மற்றும் அவரது உறவினர்கள் சிலர் அவரை வழிமறித்து தகராறு செய்தனர்.
தகராறு முற்றிய நிலையில் அவர்கள் அனைவரும் சேர்ந்து சின்னச்சாமியை உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சின்னச்சாமியின் மகள்கள் சண்முகப்பிரியா, வசுந்ராதேவி ஆகிய இருவரும் அவர்களை தடுக்க முயன்றனர். அப்போது அவர்களையும் வீராச்சாமி தரப்பினர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதில் காயமடைந்த சின்னச்சாமியை அவரது மகள்கள் மீட்டு சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சின்னச்சாமி வடமதுரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து வீராச்சாமி, அவரது உறவினர்கள் வெற்றிமுருகன் (33), வேலுமணி (40) ஆகிய 3 பேரை கைது செய்தார்.