சிறுமியை கடத்தி திருமணம் செய்த வழக்கில் தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை


சிறுமியை கடத்தி திருமணம் செய்த வழக்கில் தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
x

சிறுமியை கடத்தி திருமணம் செய்த வழக்கில் தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியது.

கரூர்

சிறுமிக்கு திருமணம்

கரூர் ஆத்தூர் பிரிவு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சுமதி. இந்த தம்பதியின் மகன் கவுசிக்குமார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கடத்தி சென்று திருப்பூரில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதற்கு கவுசிக்குமாரின் பெற்றோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

மேலும் கவுசிக்குமார் அந்த சிறுமிக்கு வாடகை வீட்டில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின்பேரின், கரூர் நகர போலீசார் வழக்குப்பதிந்து, கவுசிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பான வழக்கு கரூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதையடுத்து வழக்கு விசாரணை முழுவதும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கிற்கான தீர்ப்பை கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமாபானு வழங்கினார்.

20 ஆண்டுகள் சிறை தண்டனை

அதில், கவுசிக்குமார் சிறுமியை கடத்தி சென்றதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மேலும் ரூ. ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், சிறுமியை திருமணம் செய்ததற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், மேலும் ரூ.ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனையும், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், மேலும் ரூ.ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்தார்.

மேலும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த கவுசிக்குமாரின் தந்தை சரவணன் மற்றும் தாய் சுமதி ஆகியோருக்கு சிறுமியை திருமணம் செய்ததற்கு உடந்தையாக இருந்ததற்காக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மேலும் ரூ. ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனையும், போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், மேலும் ரூ. ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து, இவை அனைத்தையும் மூவரும் ஏககாலத்தில் அனுபவிக்க எனவும் உத்தரவிட்டார்.

ஏககாலத்தில் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் கவுசிக்குமார், சரவணன், சுமதி ஆகியோரும் அதிகபட்ச தண்டனையான 20 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

சிறையில் அடைப்பு

இதையடுத்து கவுசிக்குமார், சரவணன் சுமதி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த தீர்ப்பால் கரூர் நீதிமன்றம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.


Next Story