பெண் உள்பட 3 பேருக்கு 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை


பெண் உள்பட 3 பேருக்கு 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை
x
தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 11 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் வீடு புகுந்து 27¾ பவுன் நகைகளை திருடிய பெண் உள்பட 3 பேருக்கு 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து கூடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

நீலகிரி

கூடலூர்,

கூடலூரில் வீடு புகுந்து 27¾ பவுன் நகைகளை திருடிய பெண் உள்பட 3 பேருக்கு 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து கூடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

27¾ பவுன் நகைகள் திருட்டு

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மங்குழி மரப்பாலம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். கடந்த ஆண்டு 7.10.22-ந் தேதி அவர் உடல்நிலை சரியில்லாமல் கூடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவரது மனைவி சாவித்திரி வீட்டை பூட்டி விட்டு ஆஸ்பத்திரிக்கு சென்று கணவரை கவனித்து வந்தார். திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டை மர்ம ஆசாமிகள் உடைத்து பீரோவுக்குள் வைத்திருந்த 27¾ பவுன் நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து கூடலூர் போலீஸ் நிலையத்தில் சாவித்திரி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து நகை திருடிய கர்நாடகா மாநிலம் மைசூருவை சேர்ந்த மது (வயது 23), கேரள மாநிலம் மானந்தவாடியை சேர்ந்த மனு (20), அவரது தாயார் லதா (38) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

4 ஆண்டு கடுங்காவல்

பின்னர் கூடலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து கூடலூர் போலீசார் துரிதமாக செயல்பட்டு குற்ற பத்திரிக்கையை கூடலூர் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. மேலும் போலீசார் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் திருட்டு சம்பவம் உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. வீட்டின் பூட்டை உடைத்து 27¾ பவுன் நகைகளை திருடிய மது, மனு, லதா ஆகிய 3 பேருக்கு 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு சசின்குமார் தீர்ப்பளித்தார்.

பின்னர் 3 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, திருட்டு சம்பவம் நடந்த 3 மாதங்களில் குற்றவாளிகளுக்கு 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது என்றனர்.


Next Story