தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது; 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது; 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x

வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர் திருட்டு

நெல்லை மாவட்டம் வள்ளியூர், பணகுடி, பழவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருடு போய் வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது.

அதனை தொடர்ந்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் வள்ளியூர் துணை சூப்பிரண்டு யோகேஷ்குமார் ஆலோசனையின் பேரில் வள்ளியூர் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண்குமார், சகாய ராபின் ஷாலு மற்றும் போலீசார் சுரேஷ், ராஜா, லூர்து டேனியல், மகாராஜன், பிரம்மநாயகம், கார்த்தீசன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.

வாகன சோதனை

இந்நிலையில் வள்ளியூர் கோட்டையடி விலக்கில் தனிப்படை போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது வேகமாக சந்தேகத்துக்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில், குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள மயிலாடிபுதூரை சேர்ந்த வேலு மகன் செல்வம் (வயது 32), அதே ஊரைச் சேர்ந்த 18 வயது மதிக்கத்தக்க ஒருவர் மற்றும் நெல்லை மாவட்டம் கூத்தங்குழியைச் சேர்ந்த மிக்கேல் இன்னாசி மகன் சுபாஸ்டின் என்ற படையப்பா (24) என்பது தெரிய வந்தது.

3 பேர் கைது

இவர்கள் கடந்த சில மாதங்களாக வள்ளியூர், பணகுடி, பழவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story