கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை
கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனையும், உறவினர்கள் 2 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தேனி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.
கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனையும், உறவினர்கள் 2 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தேனி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.
கல்லூரி மாணவி
தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே கொண்டல்நகரை சேர்ந்தவர் காளிமுத்து என்ற மாரிமுத்து (வயது 67). இவருடைய மகன் சுரேஷ் என்ற சுரேஷ்குமார் (33). இவர், கடந்த 2016-ம் ஆண்டு ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்துக்கொண்டு இருந்த 17 வயது மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பழகினார். பின்னர் அந்த மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்ய திட்டமிட்டார்.
இதையறிந்த அவருடைய தந்தை காளிமுத்து, தாய் பேபியம்மாள் (68) ஆகியோரும் அதற்கு துணை போனார்கள். மாணவியை சுரேஷ்குமார் தனது பெற்றோருடன் சேர்ந்து ஆசை வார்த்தைகள் கூறி காரில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே போத்தன்கூடு பகுதிக்கு கடத்திச் சென்றார். அங்குள்ள ஒரு கோவிலில் கட்டாயப்படுத்தி திருமணம் செய்தார். அந்த திருமணத்துக்கு அதே பகுதியை சேர்ந்த உறவினரான ஜெயா (35), அவரது கணவர் சோமன் ஆகியோர் உடந்தையாக இருந்தனர். பின்னர் ஜெயாவின் வீட்டில் வைத்து மாணவியை, சுரேஷ்குமார் பாலியல் பலாத்காரம் செய்தார்.
பாலியல் பலாத்காரம்
இதற்கிடையே மாணவி மாயமானதாக கூறி அவருடைய தாய் கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சுரேஷ்குமார் மாணவியை கடத்திச் சென்று, திருமணம் முடித்ததுடன் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரியவந்தது. இதையடுத்து காணவில்லை என்று பதிவு செய்யப்பட்ட வழக்கு, போக்சோ, குழந்தை திருமணம் தடுப்பு சட்டம், ஆள் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மாற்றப்பட்டது. அந்த வழக்கில் சுரேஷ்குமார், காளிமுத்து, பேபியம்மாள், ஜெயா, சோமன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் குருவராஜ் ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி திலகம் நேற்று தீர்ப்பளித்தார்.
சிறை தண்டனை
அதில் இந்த வழக்கில் சுரேஷ்குமார், காளிமுத்து, பேபியம்மாள் ஆகிய 3 பேருக்கும் தலா 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம், அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் தலா 4 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ஜெயா, சோமன் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரையும் கோர்ட்டில் இருந்து, போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.