வக்கீல் கொலை வழக்கில் சரண் அடைந்த 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி


தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே வக்கீல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்த 3 பேரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே வக்கீல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்த 3 பேரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது.

வக்கீல்

தூத்துக்குடி அருகே உள்ள சோரீஸ்புரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் பிச்சைக்கண்ணன். இவருடைய மகன் முத்துக்குமார் (வயது 45). இவர் தூத்துக்குடி கோர்ட்டில் வக்கீல் தொழில் செய்து வந்தார். சோரீஸ்புரம் பகுதியில் தங்கநகை அடகு கடையும் நடத்தி வந்தார்.

கடந்த 23-ந் தேதி அடகு கடைக்கு சென்ற போது, வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் கொலை தொடர்பாக ஆறுமுகநேரி சீனந்தோப்பு கந்தசாமிபுரத்தை சேர்ந்த சிங்கராஜா மகன் வேல்முருகன் (வயது 25), கீழக்கடையத்தை சேர்ந்த காமராஜ் மகன் ராஜரத்தினம் (25), நெல்லை மாவட்டம் பெரும்பத்து கம்மவார் பாளையத்தை சேர்ந்த ஜெயக்குமார் மகன் இலங்கேசுவரன் (30) ஆகிய 3 பேரும் மதுரை 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

போலீஸ் காவல்

இதனை தொடர்ந்து சிப்காட் போலீசார் சரண் அடைந்த 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று தூத்துக்குடி வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டில் (பி.சி.ஆர்.) மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், 3 பேரையும், 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து சிப்காட் போலீசார் 3 பேரையும் அழைத்து சென்றனர்.

முன்னதாக சரண் அடைந்த வேல்முருகன், ராஜரத்தினம், இலங்கேசுவரன் ஆகிய 3 பேரையும் போலீசார் தூத்துக்குடி கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது அங்கு திரண்டு வந்த வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முத்துராஜ் என்பவர் சென்னை கோர்ட்டிலும், ரமேஷ் என்பவர் உளுந்தூர்பேட்டை கோர்ட்டிலும் நேற்று சரண் அடைந்தனர். அவர்களையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.


Next Story