3 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்


3 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்
x

நீலகிரியில் கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருந்த 3 போலீஸ்காரர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

நீலகிரி

பந்தலூர்,

நீலகிரியில் கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருந்த 3 போலீஸ்காரர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

கஞ்சா விற்பனை அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் தாலுகா தமிழக-கேரள மாநில எல்லையில் உள்ளது. அப்பகுதியில் சமீப காலமாக கஞ்சா விற்பனை அதிகரித்து உள்ளது. இதையடுத்து கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின்படி, தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதைதொடர்ந்து கஞ்சா விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டாலும், பந்தலூரில் கஞ்சா விற்பனை குறைந்தபாடில்லை. இதனால் அதன் விற்பனை தடுப்பது போலீசாருக்கு சவாலாக இருந்து வருகிறது. இதற்கிடையே கஞ்சா விற்பனையில் சில போலீசாருக்கும் தொடர்பு உள்ளதாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தீவிர கண்காணிப்பு

அதன் பேரில் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் சேரம்பாடி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் உடையார் செல்வம் (வயது 27), எருமாடு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் அமரன் (24) ஆகிய 2 பேர் மர்ம நபர்கள் கஞ்சா விற்பனை செய்வதற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

இதைதொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். இந்தநிலையில் நேற்று முன்தினம் புளியம்பாறையில் கஞ்சா விற்பனை செய்வதாக தேவாலா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் மற்றும் போலீசார் விரைந்து சென்று கஞ்சா விற்ற சரத்குமார் (38) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணை நடத்தியதில், தன்னிடம் போலீஸ்காரர் அமரன் விற்பனை செய்வதற்காக கஞ்சா கொடுத்ததை ஒப்புக்கொண்டார்.

பணியிடை நீக்கம்

இதையடுத்து போலீஸ்காரர் அமரனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் விவேக் (27) என்பவருக்கும் கஞ்சா விற்பனையில் தொடர்பு இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது. கஞ்சா விற்பனைக்கு போலீஸ்காரர்கள் அமரன், உடையார் செல்வம், விவேக் ஆகியோர் உடந்தையாக இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர். இதைதொடர்ந்து அமரன், உடையார் செல்வம், விவேக் 3 பேரையும் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே தேனி மாவட்டத்தில் போலீஸ்காரராக பணியாற்றிய கணேசன் என்பவர் சில காரணங்களுக்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கும் இந்த கஞ்சா விற்பனையில் தொடர்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Next Story