வீடு புகுந்து மூதாட்டியிடம் 3 பவுன் நகை பறிப்பு
குளச்சல் அருகே வீடு புகுந்து மூதாட்டியிடம் 3 பவுன் நகையை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குளச்சல்:
குளச்சல் அருகே வீடு புகுந்து மூதாட்டியிடம் 3 பவுன் நகையை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மூதாட்டி
குளச்சல் அருகே உள்ள உடையார்விளையை சேர்ந்தவர் பிச்சை. இவருடைய மனைவி நேசம் (வயது 80). இவர்களுடைய மகன் ஜாண்ராஜ்.
நேசம் தனது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வருகிறார். நேற்று அதிகாலையிலேயே அனைவரும் எழுந்ததால், வாசல் கதவை திறந்து வைத்திருந்தனர். நேசம் தனது அறையில் படுத்திருந்தார்.
நகை பறிப்பு
அப்போது, திடீரென ஒரு வாலிபர் நேசத்தின் அறைக்குள் புகுந்தார். தனது அறைக்குள் சத்தம் கேட்பதை அறிந்து எழுந்த நேசம், வாலிபர் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். அதற்குள் அந்த நபர், நேசத்தின் கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலிைய பறித்து விட்டு தப்பியோட முயன்றார்.
நேசத்தின் சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது மகனும், மருமகளும் சுதாரித்துக் கொண்டு அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
கைது
பின்னர், பிடிபட்ட வாலிபரை குளச்சல் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில், அவர் குளச்சல் அருகே வேப்பவிளையை சேர்ந்த அஜின் (29) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அஜினை கைது செய்து அவரிடம் இருந்து 3 பவுன் நகையை மீட்டனர்.