கிடப்பில் போடப்பட்டுள்ள 3 ரெயில்வே மேம்பால பணிகள்


கிடப்பில் போடப்பட்டுள்ள 3 ரெயில்வே மேம்பால பணிகள்
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் 3 ரெயில்வே மேம்பால பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் வாகன போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை உள்ளது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் 3 ரெயில்வே மேம்பால பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் வாகன போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை உள்ளது.

காத்திருக்கும் வாகனங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் 3 ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் நாள்தோறும் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்து வருகிறது. இதனல் டெல்டா மாவட்ட மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.சாலைகள் பல்வேறு பகுதிகளை இணைப்பது மட்டுமின்றி நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய தேவையாகவும் இருந்து வருகிறது. சாலை போக்குவரத்து மூலம் தான் அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் பல இடங்களில் ரெயில்வே இருப்பு பாதையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இந்த இடங்களில் மேம்பாலம், கீழ்பாலம் இல்லாத நிலையில் வாகனங்கள் ரெயில்வே கேட்டில் வெகுநேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

ரெயில்வே கேட்

இந்த காத்திருப்பால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் உரிய காலத்தில் செல்ல வேண்டிய இடத்துக்கு சென்று அடைய முடியாமல் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதன் காரணமாக ரெயில்வே பாதையில் மேம்பாலம், கீழ்பாலம் என்பது மிக அவசியமாகிறது. நாகை-தஞ்சை-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சை-திருவாரூர் இடையே 4 ரெயில்வே கேட்டுகள் உள்ளன. இதேபோல் திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் பேரளத்தில் ஒரு ரெயில்வே கேட்டும், திருவாரூர்-மன்னார்குடி பாதையில் சிங்களாஞ்சேரியில் ஒரு ரெயில்வே கேட்டும் அமைந்துள்ளது. இந்த 6 ரெயில்வே கேட்டுகள் அவ்வப்போது மூடப்படும் நிலையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பது வழக்கமாக உள்ளது.

3 மேம்பாலங்கள்

குறிப்பாக நாகை- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நீடாமங்கலம் ரெயில்வே கேட் நகரின் மைய பகுதியில் உள்ளது. இந்த பாதையில் மன்னார்குடி, கும்பகோணம், திருவாரூர், தஞ்சை என 4 வழிப்பாதைகள் சந்திக்கும் இடமாக இருந்து வருகிறது. இதனால் ஏராளமான வாகன போக்குவரத்து நிறைந்த பகுதியாக இந்த பகுதி உள்ளது. நீடாமங்கலம் ரெயில்வே கேட் அடிக்கடி ½ மணி நேரத்துக்கு மேல் மூடப்படும். இதனால் ரெயில்வே ேகட்டுகளில் சிக்கும் வாகனங்கள அதிக நேரம் காத்திருப்பதால், அதில் பயணம் செய்பவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த 2013-ம் ஆண்டு நீடாமங்கலம் ரெயில்வே கேட், மயிலாடுதுறை பேரளம் ரெயில்வே கேட், மன்னார்குடி சாலை சிங்களாஞ்சேரி ரெயில்வே கேட் அருகில் 3 மேம்பாலம் கட்டப்படும் என அரசு அறிவித்தது.

இணைப்பு சாலை

இந்த அறிவிப்பு வெளியாகி 9 ஆண்டுகள் ஆன நிலையில் 3 ரெயில்வே மேம்பாலமும் கட்டப்படாமல் இருந்து வருகிறது. இதில் திருவாரூர்- மன்னார்குடி சாலையில் ரெயில்வே மேம்பாலம் கடந்த 2013-ம் ஆண்டு ரூ.27 கோடி 6 லட்சம் மதிப்பில் கட்ட திட்டம் தயாரிக்கப்பட்டது. இதைத்ெதாடர்ந்து ரெயில்வே நிர்வாகம் உடனடியாக தண்டவாள பாதையில் பாலம் கட்டும் பணியினை தொடங்கி நிறைவு செய்தது. இந்த பாலம் கட்டப்பட்டு 4 ஆண்டுகள் ஆன நிலையில் இணைப்பு சாலை பணிகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக ரெயில்வே துறையால் கட்டப்பட்ட பாலம் அந்தரத்தில் தொங்கும் நிலையில் உள்ளது. இதேபோல் திருவாரூர்-மயிலாடுதுறை மாவட்டத்தை இணைக்கும் பேரளம் ரெயில் மேம்பாலம் கட்டும் பணிகள் முற்றிலும் நடைபெறால் இருந்து வருகிறது.

நிலம் கையகப்படுத்தும் பணி

குறிப்பாக மிக முக்கியமான நீடாமங்கலம் ரெயில்வே மேம்பாலம் பிரதான கடைவீதி சாலையில் அமைந்துள்ளதால் நிலம் கையகப்படுத்தும் பணிகளில் பல்வேறு சிக்கல் நிலவி வருகிறது.3 ரெயில்வே மேம்பாலங்கள் கட்டப்படாததால் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை ஆகிய டெல்டா மாவட்ட மக்கள் நாள்தோறும் ரெயில்வே கேட்டுகள் மூடப்படுவதால் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே ரெயில்வே மேம்பாலங்களை விரைந்து கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story