புராதனவனேஸ்வரர் கோவிலில் பூட்டை உடைத்து 3 சாமி சிலைகள் திருட்டு


புராதனவனேஸ்வரர் கோவிலில் பூட்டை உடைத்து 3 சாமி சிலைகள் திருட்டு
x

புராதனவனேஸ்வரர் கோவிலில் பூட்டை உடைத்து 3 சாமி சிலைகள் திருட்டு

தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 3 சாமி சிலைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

புராதனவனேஸ்வரர் கோவில்

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் கி.பி. 7-ம் நூற்றாண்டை சேர்ந்த புராதனவனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் இந்த கோவில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இந்த கோவிலின் குடமுழுக்கு விழா கடந்த 2001-ம் ஆண்டு நடந்தது. அதன் பிறகு இன்னும் குடமுழுக்கு விழா நடைபெறவில்லை. மேலும் திருப்பணி வேலைகளை எதிர்நோக்கி உள்ளதால் முக்கிய திருவிழாக்களும் நடைபெறாமல் உள்ளது.

தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

கோவிலின் பழமையான தேர் சிதிலமடைந்ததை தொடர்ந்து புதிய தேர் அமைக்க கிராம மக்களின் பங்கு தொகை, தமிழக அரசின் நிதி உதவியோடு தேர் அமைக்கப்பட்டு அதுவும் இன்னும் வெள்ளோட்டம் விடப்படாத நிலையில் உள்ளது.

மேலும் கோவிலில் திருப்பணி வேலைகள் செய்து குடமுழுக்கு விழாவை நடத்துவதற்கு தமிழக அரசு சமீபத்தில் ரூ.1 கோடியே 25 லட்சம் நிதி ஒதுக்கீ செய்துள்ளது.

உலோக சிலைகள்

இந்த கோவிலுக்கு செந்தமான ஐம்பொன் சிலைகள் திருவாரூர் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டு இந்த கோவிலுக்கு உபயதாரர்களால் உலோகத்தால் ஆன நடராஜர், அம்மன், சோமாஸ்கந்தர் சிலைகள் வழங்கப்பட்டன. இந்த சிலைகள் கோவிலில் உள்ள நடராஜர் சன்னதியில் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டு இருந்தது.

திருட்டு

புயல் எச்சரிக்கை காரணமாக மக்கள் நடமாட்டம் இல்லாத சூழலை பயன்படுத்தி நேற்று முன்தினம் இரவு கோவில் வலதுபுற சுற்றுச்சுவர் வழியாக உள்ளே புகுந்த மர்ம நபர்கள், நடராஜர் சன்னதியில் இருந்த இரும்பினால் ஆன கிரில் கேட்டுகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே சென்று உள்ளனர்.

பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த நடராஜர், அம்மன், சோமாஸ்கந்தர் ஆகிய 3 சிலைகளையும் திருடி சென்றுவிட்டனர். இதன் எடை சுமார் 45 கிலோ எனவும், இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

அதிர்ச்சி

நேற்று காலை கோவில் பணியாளர்கள் கோவிலை திறந்தபோது அங்கு வைக்கப்பட்டு இருந்த சிலைகள் மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பணியார்கள் இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சிற்றம்பலம் போலீசார், கோவில் முழுவதையும் சோதனை செய்தனர். அப்போது கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் அலாரம் ஆகியவற்றின் ஒயர்களை துண்டித்து விட்டு, சிலைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

விசாரணை

இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை செயல் அலுவலர் ரவிச்சந்திரன், ஆய்வாளர் அமுதா, பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரித்திவிராஜ் சவுக்கான் ஆகியோர் கோவில் பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர்.போலீஸ் மோப்ப நாய் 'டபி' அங்கு வரவழைக்கப்பட்டது. அது கோவிலில் இருந்து திருச்சிற்றம்பலம் கடைத்தெரு வரை ஓடிச்சென்று நின்று விட்டது. கைரேகை நிபுணர் அமலா கோவிலில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தார்.இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சிற்றம்பலம் புராதவனேஸ்வர் கோவிலில் சாமி சிலைகள் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story