3 கடைகளின் ஜன்னல்களை உடைத்து திருட்டு


3 கடைகளின் ஜன்னல்களை உடைத்து திருட்டு
x
தினத்தந்தி 2 April 2023 12:15 AM IST (Updated: 2 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே 3 கடைகளின் ஜன்னல்களை உடைத்து திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

மயிலாடுதுறை

மயிலாடுதுறை செட்டித் தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 55). இவர் மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் மூங்கில்தோட்டம் பகுதியில் நகை தயாரிக்கும் கூடம் வைத்துள்ளார். இவர் வழக்கமாக நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளாா். பின்னர். நேற்று காலை கடையை அவர் திறந்தபோது கடையின் பின்பகுதியில் உள்ள ஜன்னல் உடைக்கப்பட்டு கடைக்குள் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் உள்ளே இருந்த அரை பவுன் மோதிரம் மற்றும் வெள்ளி பொருட்கள், ராசி கற்களை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதே போல அதே வளாகத்தில் உள்ள புகழேந்திரன் என்பவருக்கு சொந்தமான செல்போன் பழுது நீக்கும் கடையின் பின்புற ஜன்னலும் உடைக்கப்பட்டு, அந்த கடையில் பழுது நீக்க வைக்கப்பட்டிருந்த 3 செல்போன்கள் திருட்டு போயிருந்தது.மேலும் அருகில் ஸ்டாலின் என்பவருக்கு சொந்தமான முடிதிருத்த கடையிலும் ஜன்னல் உடைக்கப்பட்டு கல்லாவில் இருந்த ரூ.500 திருட்டு போயிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டு நடைபெற்ற கடைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து அன்பழகன், புகழேந்திரன், ஸ்டாலின் ஆகிய 3 பேர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story