வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு சீல்
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
திருவண்ணாமலை நகராட்சிக்கு சொந்தமாக 440 கடைகள் உள்ளன. இதில் தற்போது 360 கடைகள் செயல்பாட்டில் உள்ளன. இந்த கடைகளில் இருந்து நகராட்சிக்கு ரூ.11 கோடி வரி பாக்கி வர வேண்டி உள்ளது.
மத்திய பஸ் நிலையத்தில் உள்ள கடையில் இருந்து மட்டும் ரூ.6 கோடி பாக்கி வசூலாகாமல் உள்ளது. வரிபாக்கி வைத்துள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் வாடகை செலுத்த நோட்டீஸ் அனுப்பினர். இருப்பினும் பாக்கி வசூல் ஆகாததால் நகராட்சி ஆணையாளர் முருகேசன் உத்தரவின் பேரில் வரி செலுத்தாத கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு சீல் வைக்கும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து நகராட்சி மேலாளர் ஸ்ரீபிரகாஷ், வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் மத்திய பஸ் நிலையத்தில் வாடகை பாக்கி வைத்திருந்த 3 கடைகளுக்கு சீல் வைத்தனர்.
தொடர்ந்து மற்ற கடைகளுக்கும் சீல் வைக்க அலுவலர்கள் சென்ற போது கடை உரிமையாளர்கள் பாக்கி செலுத்த முன் வந்ததால் சீல் வைக்கும் நடவடிக்கையை தற்காலிகமாக கைவிட்டனர். இதனால் பஸ் நிலையத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.