படுத்த படுக்கையான தந்தையை கவனிக்க தவறிய 3 மகன்கள்
தக்கலை அருகே படுத்த படுக்கையான தந்தையை 3 மகன்கள் கவனிக்கவில்லை. இதுதொடர்பாக வந்த புகாரை தொடர்ந்து 3 மகன்களும் தந்தையை முறையாக பராமரிப்பதோடு மாதம்தோறும் தலா ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என சப்-கலெக்டர் கவுசிக் உத்தரவிட்டார்.
தக்கலை:
தக்கலை அருகே படுத்த படுக்கையான தந்தையை 3 மகன்கள் கவனிக்கவில்லை. இதுதொடர்பாக வந்த புகாரை தொடர்ந்து 3 மகன்களும் தந்தையை முறையாக பராமரிப்பதோடு மாதம்தோறும் தலா ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என சப்-கலெக்டர் கவுசிக் உத்தரவிட்டார்.
படுத்த படுக்கையில் தந்தை...
தக்கலை அருகே உள்ள மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் சுவாமிநாதன் (வயது 78). இவருடைய மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ஸ்டீபன், பால்ராஜ், சுஜின் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதில் ஸ்டீபன், பால்ராஜ் ஆகிய 2 பேரும் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள்.
இதனால் திருமணமாகாத இளையமகன் சுஜினுடன் சுவாமிநாதன் வசித்தார். 3 மகன்களும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்கள். சுவாமிநாதனுக்கு மொத்தம் 6½ சென்ட்டில் நிலம் இருந்தது. இதில் 1½ சென்ட்டில் வீடு உள்ளது. மீதமுள்ள 5 சென்ட் நிலத்தை திருமணமான 2 மகன்களுக்கும் எழுதி கொடுத்திருந்தார். இந்தநிலையில் வயது மூப்பு காரணமாக உடல்நலமில்லாமல் படுத்த படுக்கையானார் சுவாமிநாதன்.
கவனிக்க தவறிய மகன்கள்
இதனால் தந்தையை கவனிப்பதில் 3 மகன்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது நீ பார்க்க வேண்டியது தானே என 3 பேரும் மாறி, மாறி கூறி விட்டு தந்தையை கவனிக்கவில்லை என கூறப்படுகிறது.
வயதான காலத்தில் தன்னை கவனிக்க ஆள் இல்லையே என சுவாமிநாதன் மனவேதனைக்குள்ளானார். மேலும் தான் கஷ்டப்பட்டு வளர்த்த பிள்ளைகள், கடைசி காலத்தில் தன்னை கவனிப்பதில் அக்கறை செலுத்த மறுத்து வருகிறார்களே என மிகவும் நொந்து போனார்.
சப்-கலெக்டர் விசாரணை
ஒரு கட்டத்தில் சுவாமிநாதன் தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் முதியோர் பாதுகாப்பு நல தீர்ப்பாயத்தில் மனு அளித்தார். அதில், உடல்நலமில்லாத என்னை 3 மகன்களும் கவனிக்கவில்லை. ஆகவே அவர்களிடமிருந்து பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொகை பெற்று தருமாறு மனு அளித்தார்.
இதுதொடர்பான விசாரணை நேற்று பத்மநாபபுரம் சப்-கலெக்டரும், தீர்ப்பாயத்தின் நடுவருமான கவுசிக் 3 மகன்களையும் வரவழைத்து விசாரணை நடத்தினர்.
ரூ.6 ஆயிரம் வழங்க உத்தரவு
அந்த சமயத்தில் படுத்த படுக்கையாக இருந்த சுவாமிநாதன் ஆட்டோவில் அழைத்து வரப்பட்டார். இதனை அறிந்த சப்-கலெக்டர் கவுசிக் அலுவலகத்தில் இருந்து கீழே இறங்கி சுவாமிநாதன் இருக்கும் பகுதிக்கு வந்தார். தொடர்ந்து அவரிடம் நலம் விசாரித்த கவுசிக், கொடுத்த மனு குறித்து விசாரித்தார்.
இந்த விசாரணைக்கு பிறகு 3 மகன்களும் தலா ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும், 15 நாட்களுக்கு ஒரு மகன் என மாறி, மாறி 3 பேரும் தந்தையை பராமரிக்க வேண்டும் என சப்-கலெக்டர் கவுசிக் உத்தரவிட்டார்.