சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வினை 3 ஆயிரத்து 348 பேர் எழுதினர்


புதுக்கோட்டையில் 2 மையங்களில் நடைபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வினை 3 ஆயிரத்து 348 பேர் எழுதினர். தேர்வினை திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. சந்தோஷ்குமார் பார்வையிட்டார்.

புதுக்கோட்டை

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் காவல்துறையில் 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று காலை மற்றும் மதியம் நடைபெற்றது. புதுக்கோட்டையில் சிவபுரத்தில் ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியிலும் என 2 மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வை எழுத மாவட்டத்தில் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 32 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தேர்வினை திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. சந்தோஷ்குமார் பார்வையிட்டார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உடன் இருந்தார்.

684 பேர் தேர்வு எழுதவில்லை

அரசம்பட்டியில் தேர்வு மையத்திற்குள் தேர்வு எழுத சென்ற சில தேர்வர்கள் கைக்குழந்தைகளை தங்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்து சென்றனர். அவர்கள் தேர்வு மையத்தின் வெளியே குழந்தைகளை வைத்து பராமரித்து வந்தனர். தேர்வு எழுதிவிட்டு வந்ததும் தங்களது குழந்தைகளை தேர்வர்கள் கொஞ்சி மகிழ்ந்தனர். தேர்வர்களுக்கு வசதியாக புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

புதுக்கோட்டையில் 2 மையங்களில் நடைபெற்ற தேர்வினை 3 ஆயிரத்து 348 பேர் எழுதினர். 684 பேர் தேர்வு எழுதவரவில்லை. தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.

பலத்த சோதனை

தேர்வு மையத்திற்குள் காலை 8.30 மணியளவில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி தேர்வர்கள் அனைவரும் காலையில் தேர்வு மையத்திற்கு வந்தனர். நுழைவுவாயிலில் அவர்களை பலத்த சோதனை செய்து தேர்வு மையத்திற்குள் போலீசார் அனுப்பினர்.

தேர்வறைக்குள் செல்போன் உள்ளிட்டவை அனுமதிக்கப்படவில்லை. இதனை கொண்டு வந்தவர்களிடம் நுழைவுவாயிலில் போலீசார் சோதனையின் போது வாங்கி அதனை பாதுகாப்பாக வைத்து டோக்கன் வினியோகித்தனர். தேர்வர்களின் உடைமைகளையும் அதில் வைத்தனர்.


Next Story