வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரெயில்கள் 3 மணி நேரம் தாமதம்


வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரெயில்கள் 3 மணி நேரம் தாமதம்
x

வாணியம்பாடி ரெயில்நிலைய பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் 3 ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டு தாமதமாக சென்றன. இதனால் பயணிகள் கடுமையாக அவதிப்பட நேர்ந்தது.

திருப்பத்தூர்

தண்டவாள பராமரிப்பு பணி

கர்நாடக மாநிலம் மங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு மதியம் 12.14 மணியளவில் வந்து சேர்ந்தது. வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே தண்டவாள பராமரிப்பு பணி நடந்ததால் ரெயில் ஜோலார்பேட்டையிலேயே நிறுத்தப்பட்டது.

3.30 மணிக்கு பின்னர்தான் பணிகள் முடிந்தன. அதன் பின்னரே ரெயில்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து 3 மணி நேரம் கழித்து பிற்பகல் 3.23 மணியளவில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது. ஆனால் வாணியம்பாடி ரெயில் நிலைய பகுதியில் தொடர்ந்து பராமரிப்புபணி முடியவில்லை என தெரிவிக்கப்பட்டதால் வாணியம்பாடி ரெயில் நிலையத்துக்கு முன்னதாக சிறிது தொலைவில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. சுமார் 30 நிமிடம் கழித்து ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே யார்டு பகுதியில் நேற்று பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 4 மணி வரை தண்டவாளம் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டதால் வாணியம்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ரெயில்வே ஊழியர்கள் பணிகளை மேற்கொண்டனர்.

இதனால் நேற்று ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக செல்லும் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 பயணிகள் ரெயில்கள் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு அதன் பிறகு சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில்

இதேபோல் கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் 12.10 மணியளவில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு சுமார் 3 மணி நேரம் தாமதமாக ஹவுரா நோக்கி புறப்பட்டது.

மேலும் கர்நாடக மாநிலம் பையனப்பள்ளி ரெயில் நிலையத்தில் இருந்து திரிபுரா மாநிலம் அகர்தலா வரை செல்லும் அகர்தலா எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை 12.20 மணியளவில் வந்தடைந்தது. அந்த ரெயிலும் இங்கேயே நிறுத்தப்பட்டு பிற்பகல் 3.40 மணியளவில் அகர்தலா நோக்கி புறப்பட்டது.

அத்துடன் கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஆந்திரா மாநிலம் காக்கிநாடா வரை செல்லும் காக்கிநாடா எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு 2 மணியளவில் வரவேண்டிய நிலையில் ஏற்கனவே 2 ரெயில்கள் இங்கு நின்றதால் பிளாட்பாரம் கிடைக்கவில்லை. இதனால் அந்த ரெயில் வரும் வழியில் நிறுத்தி வைக்கப்பட்டு ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு 3.45 மணியளவில் வந்தடைந்தது. அதன் பிறகு சிறிது நேரம் கழித்து காக்கிநாடா நோக்கி புறப்பட்டது.

வெயிலில் அவதி

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் ரெயில் பயணிகள் கடும் வெயிலில் ரெயிலில் அமர முடியாமல் பிளாட்பாரத்தில் அமர்ந்தனர் மேலும் சில பயணிகள் பிளாட்பாரத்தில் ரெயில்வே பிளாட்பாரத்தில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர். இதனால் ரெயிலில் முதியவர்கள் மற்றும் பெண்கள் மிகவும் அவதிப்பட்டனர்.


Next Story