ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பெண்கள் கைது


ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பெண்கள் கைது
x

திருமால்பூர் ெரயில் நிலையத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1,350 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை

போலீசார் ரோந்து சென்றனர்

வடக்கு மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு கீதா உத்தரவின்பேரில், வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் மேற்பார்வையில், ராணிப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஏட்டுகள் சந்திரன், அருள், நீலாவதி ஆகியோர் திருமால்பூர் ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது 2-வது பிளாட்பாரம் அருகில் உள்ள முட்புதர் மறைவில் சிறு சிறு மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. போலீசாரை கண்டதும் அங்கிருந்து 3 பெண்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த கோவிந்தவாடி அகரம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் மனைவி மேனகா (வயது 27), பார்த்திபன் மனைவி சுதா (27), அரக்கோணம் திருமால்பூர் குறவர் காலனியை சேர்ந்த முனியாண்டி மனைவி அமுதா (45) என தெரியவந்தது.

3 பெண்கள் கைது

அவர்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் ரேஷன் அரிசியை சேகரித்து, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு ரெயில் மூலம் கடத்த முயன்றதை ஒப்புக் கொண்டனர். மூட்டைகளை சோதனை செய்து பார்த்தபோது, தலா 25 கிலோ எடை கொண்ட 54 மூட்டைகளில் சுமார் 1,350 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.

ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து, வாலாஜா நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, மேனகா, சுதா, அமுதா ஆகிய 3 பேரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.


Next Story