கோவில் கும்பாபிஷேக விழாவில் தங்க சங்கிலி பறிக்க முயன்ற 3 பெண்கள் கைது


கோவில் கும்பாபிஷேக விழாவில் தங்க சங்கிலி பறிக்க முயன்ற 3 பெண்கள் கைது
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில் கும்பாபிஷேக விழாவில் தங்க சங்கிலி பறிக்க முயன்ற 3 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம்

விழுப்புரம் அருகே திருவாமாத்தூர் கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த அபிராமேஸ்வரர் கோவிலில் நேற்று காலை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர்களின் கூட்டநெரிசலை பயன்படுத்தி யாரேனும் குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் விழுப்புரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மற்றும் ஏராளமான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

நகை பறிக்க முயற்சி

மேலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்கள் அணிந்திருக்கும் தங்கசங்கிலியை பறிக்கும் நபர்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்கும்படியும், குறிப்பாக நகைகளை பாதுகாக்கும் வண்ணம் சேப்டி பின், பெண் போலீசார் மூலம் வழங்கப்பட்டு தங்க சங்கிலிகளை ஜாக்கெட் அல்லது புடவையோடு இணைத்துக்கொள்ள அதை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனை மீறியும் கூட்டநெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் தங்க சங்கிலியை சில பெண்கள் பறிக்க முயன்றனர். அவர்களை போலீசார் சிறிதுநேரம் நோட்டமிட்டு வந்தனர்.

3 பெண்கள் சிக்கினர்

பின்னர் நகை பறிக்க முயன்ற 3 பெண்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்-இன்ஸ் பெக்டர்கள் கணேசன், பாலசிங்கம் மற்றும் போலீசார், கையும், களவுமாக மடக்கிப்பிடித்து அவர்களை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் கோவை பாபா கோவில் தெரு பகுதியை சேர்ந்த அய்யப்பன் மனைவி காளியம்மாள் (வயது 45), ஜோசப் மனைவி கவிதா (39), ராஜி மனைவி இசக்கியம்மாள் என்கிற மேகலா (38) என்பதும், இவர்கள் கோவில் திருவிழாக்களில் கூட்டாக சேர்ந்து பெண்களிடம் நகையை பறிக்கும் செயல்களில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதும், இவர்கள் மீது விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்ற பல குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து காளியம்மாள் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story