கைதான 3 பெண்கள், சிறையில் அடைப்பு
மதுரையில் அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு சம்பவத்தில் கைதான 3 பெண்கள், சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுரை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காரை மறித்து, செருப்பு வீசிய சம்பவத்தில் 30-க்கும் மேற்பட்டவர்கள் மீது அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதில் 7 பேரை ஏற்கனவே கைது செய்தனர். விசாரணையில் செருப்பை வீசியது பெண் என தெரியவந்தது.
இதுதொடர்பாக விளாங்குடியை சேர்ந்த சரண்யா (வயது 38), மதுரை மாவட்ட பா.ஜ.க. மகளிரணி நிர்வாகிகள் பெத்தானியாபுரத்தை சேர்ந்த தெய்வானை (47), முடக்குசாலையை சேர்ந்த தனலட்சுமி (47) ஆகிய 3 பேருக்கு செருப்பு வீச்சு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. அதை தொடர்ந்து தனிப்படை போலீசார் அவர்கள் 3 பேரையும் திருப்பரங்குன்றம் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதை தொடர்ந்து போலீசார், அவர்கள் 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.
பின்னர் 3 பேரையும் மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது தவிர இந்த சம்பவத்தில் தொடர்புடைய வேங்கைமாறன் என்பவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.