கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்னல் தாக்கி 3 பெண்கள் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சின்னசேலம்,
நடவு பணி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பெத்தானூர் கிராமத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண் கூலி தொழிலாளர்கள் நேற்று மதியம் கருங்குழி கிராமத்தில் நெற்பயிர் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
அப்போது நடவு பணியில் ஈடுபட்டிருந்த பெத்தானூரை சேர்ந்த செந்தில் மனைவி உமா (வயது 30), ராமர் மனைவி பெரியம்மாள்(40) ஆகியோரை மின்னல் தாக்கியது. இதில் அவர்கள் 2 பேரும் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் உமா, பெரியம்மாள் உடலை பார்த்து கதறி அழுததோடு, இதுபற்றி கீழ்குப்பம் போலீசாருக்கும், வருவாய்த்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதிகாரிகள் விசாரணை
அதன்பேரில் சின்னசேலம் தாசில்தார் இந்திரா, நயினார்பாளையம் வருவாய் ஆய்வாளர் செந்தில் மற்றும் கீழ்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மின்னல் தாக்கி பலியான 2 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மின்னல் தாக்கி பலியான பெரியம்மாளின் கணவர் கடந்த ஆண்டு கொரோனாவால் இறந்தார். இதனால் பெற்றோரை இழந்த பெரியம்மாளின் 3 குழந்தைகளும் பரிதவித்து வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்
இதே போல் கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் கிராமத்தில் வசிக்கும் பெரியசாமி மனைவி முனியம்மாள் (53). நேற்று மதியம் மழை பெய்தபோது வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது அவரை மின்னல் தாக்கியது. இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முனியம்மாள் பரிதாபமாக இறந்து விட்டார்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மின்னல் தாக்கி 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.