வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.1,200 லஞ்சம் பெற்ற முன்னாள் கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை


வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.1,200 லஞ்சம் பெற்ற முன்னாள் கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
x

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.1,200 லஞ்சம் பெற்ற முன்னாள் கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, உடந்தையாக இருந்த கிராம உதவியாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர்

வாரிசு சான்றிதழ்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் கோவக்குளத்தை அடுத்த பிச்சம்பட்டியை சேர்ந்த காத்தான் மகன் பெரியசாமி. இவர் மனைவி செல்லம்மாள். செல்லம்மாளின் தந்தை இறந்துவிட்டதால் மனைவி செல்லம்மாளுக்கு வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக கடந்த 2010-ம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். இதுதொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் 24-ந்தேதி கிருஷ்ணராயபுரம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் கே.பெரியசாமியை அணுகி சான்றிதழ் கேட்டபோது ரூ.1,200 லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் தர விரும்பாத பெரியசாமி இதுகுறித்து திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் அறிவுறுத்தலின்பேரில், பெரியசாமி ரூ.1,200 லஞ்சம் வழங்கிய போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலர் பெரியசாமி, அவருக்கு உடந்தையாக இருந்த கிராம உதவியாளர் கிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

3 ஆண்டு சிறை தண்டனை

இந்த வழக்கு கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் சிறப்பு நீதிபதி ராஜலிங்கம் நேற்று தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் கிராம நிர்வாக அலுவலர் கே.பெரியசாமிக்கு (72) லஞ்சம் கேட்டதற்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம், அபராதம் செலுத்த தவறினால் மேலும், 6 மாதம் சிறை தண்டனையும், அரசு பதவியை தவறாக பயன்படுத்தி லஞ்சம் பெற்றதற்காக 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து இத்தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

இதற்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக கிராம உதவியாளர் கிருஷ்ணனுக்கு (67) ஓராண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


Next Story