4 பேருக்கு 3 ஆண்டு சிறை
பெண்ணிடம் நகை பறித்த 4 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது
நெல்லை அருகே உள்ள தென்கலம்புதூரை சேர்ந்தவர் கலையரசி (வயது 25). இவர், கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி நாரணம்மாள்புரம் அருகே அவரது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் கலையரசியின் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து கலையரசி தாழையூத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட தாழையூத்தை சேர்ந்த மணிகண்டன் (22), ராஜவல்லிபுரத்தை சேர்ந்த வலதி என்ற அஞ்சலி (22), குறிச்சிகுளத்தை சேர்ந்த முத்துசெல்வம் (24) மற்றும் சீவலப்பேரியை சேர்ந்த வலதி என்ற ஆறுமுகம் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை நெல்லை 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நீதிபதி விஜயராஜ்குமார் வழக்கை விசாரித்து மணிகண்டன் உள்பட 4 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
இதில் வலதி என்ற ஆறுமுகம் சீவலப்பேரியில் நடந்த 2 கொலை வழக்கிலும் சம்பந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் திறமையாக புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக கோர்ட்டில் ஆஜர்படுத்தி தண்டனை பெற்று கொடுத்த தாழையூத்து போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பாராட்டியுள்ளார்.