போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை


போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 11 Nov 2022 3:29 AM IST (Updated: 11 Nov 2022 4:04 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருச்சி

ரூ.5 ஆயிரம் லஞ்சம்

திருச்சி பொன்மலைப்பட்டியை சேர்ந்தவர் செல்லையா. இவர் விமானநிலையம் பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். கடந்த 2009-ம் ஆண்டு இவரது ஆலையில் பணிபுரிந்த முனியன் என்பவரை செல்லையா தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து முனியனின் மனைவி ரம்யா திருச்சி விமானநிலைய போலீஸ் நிலையத்தில் செல்லையா மீது புகார் அளித்தார்.

புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க அப்போதைய விமானநிலைய போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த முருகேசன் அரிசி ஆலை அதிபர் செல்லையாவிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு சிறை

கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முருகேசன் விமானநிலைய போலீஸ் நிலையத்தில் வைத்து லஞ்சம் வாங்கியபோது, அவரை அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி கார்த்திகேயன் நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில் முருகேசனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து இருந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுரேஷ்குமார் ஆஜரானார்.

முருகேசன் தற்போது திருச்சி சிலை திருட்டு தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் மீது ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு கே.கே.நகர் இந்தியன் வங்கி காலனியை சேர்ந்த பரிமளா (வயது 35) என்பவர் பாலியல் குற்றச்சாட்டு புகார் தெரிவித்து இருந்தார். அப்போது இதுகுறித்து கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story