தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை வழக்கில் தம்பதிக்கு 3 ஆண்டு சிறை


தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை வழக்கில் தம்பதிக்கு 3 ஆண்டு சிறை
x

போடி அருகே தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை வழக்கில் தம்பதிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தேனி

போடி அருகே மேலசொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 44). இவர் போடி புதுகாலனியை சேர்ந்த பேச்சிமுத்து (58), அவருடைய மனைவி பூங்கொடி (57) ஆகியோரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். அதற்கு வட்டியுடன் ரூ.80 ஆயிரம் செலுத்திய நிலையில், மேலும் பணம் கேட்டு அவர்கள் இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு முருகனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டை பூட்ட முயன்றனர்.

அப்போது அவர்கள் முருகனை சாதியை சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அவர் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பேச்சிமுத்து, பூங்கொடி ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் இந்த வழக்கு தேனி மாவட்ட தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் இசக்கிவேல் ஆஜரானார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி ரவி இன்று தீர்ப்பளித்தார். அப்போது பேச்சிமுத்து, பூங்கொடி ஆகிய 2 பேருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


Next Story