முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை
மது அருந்திவிட்டு கார் ஓட்டியதில் இருவர் உயிரிழப்பு: முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 56). இவர் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி இரவு மது அருந்துவிட்டு கிழக்கு கடற்கரைச்சாலை வழியாக வேளாங்கண்ணி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அதேசமயம் இந்த சாலையில் கணேஷ் (30) மற்றும் ஆரோக்கியராஜ் (31) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் எதிரே வந்து கொண்டிருந்தனர். அப்போது பாப்பாகோவில் அருகே கிருஷ்ணமூர்த்தி ஓட்டி சென்ற கார், கணேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணேஷ், ஆரோக்கியராஜ் ஆகிய 2 பேரும் உயிர் இழந்தனர். இது குறித்து நாகை டவுன் போலீசார், காரை ஓட்டிவந்த கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நாகை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகா, மது அருந்திவிட்டு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 6 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.