வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை
பெண்ணிடம் தங்கசங்கிலி பறித்த வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மன்னார்குடி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
மன்னார்குடி:
பெண்ணிடம் தங்கசங்கிலி பறித்த வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மன்னார்குடி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
தங்கசங்கிலி பறிப்பு
மன்னார்குடியை அடுத்த ஆலங்கோட்டை மெயின் ரோட்டை சேர்ந்தவர் கபிலன். இவரது மனைவி ரோஷினி (வயது 27). இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு மன்னார்குடி அடுத்த மேலவாசலில் இருக்கும் ரோஷினியின் தாயார் வீட்டுக்கு காரில் சென்றனர். பின்னர் மேலவாசல் சென்று, தாயார் வீட்டில் காரை நிறுத்திவிட்டு இருவரும் இறங்கியுள்ளனர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ரோஷினியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்கசங்கிலியை பறித்து கொண்டு தப்பியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
வாலிபர் கைது
இந்த நிலையில் ரோஷினியின் செயினை பறித்து சென்ற பட்டுக்கோட்டை அடுத்த சூரப்பள்ளத்தை சேர்ந்த ராஜேஷ் குமார் (23) என்பவரை போலீசார் கைது செய்து நகையை மீட்டனர். இந்த சம்பவம் குறித்த வழக்கு மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி அமிர்தீன், செயினை பறித்து சென்ற ராஜேஷ்குமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.