முறுக்கு வியாபாரிக்கு 3 ஆண்டு சிறை


முறுக்கு வியாபாரிக்கு 3 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 16 Jun 2023 2:55 AM IST (Updated: 16 Jun 2023 12:02 PM IST)
t-max-icont-min-icon

நகை திருடிய வழக்கில் முறுக்கு வியாபாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது

தஞ்சாவூர்


2 பெண்களிடம் நகை திருடிய வழக்கில் முறுக்கு வியாபாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

பெண்களிடம் நகை திருட்டு

தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவர் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென ஜெயலட்சுமி கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்து கொண்டு சென்று விட்டார்.

அதேபோல் தஞ்சை வித்யாநகரை சேர்ந்த உமா என்பவர் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்றபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் திடீரென உமா கழுத்தில் கிடந்த 7½ பவுன் நகையை பறித்து சென்று விட்டார்.

3 ஆண்டுகள் சிறை

இந்த 2 சம்பவங்கள் குறித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம் சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த முறுக்கு வியாபாரி ரமேஷ்(வயது 57) என்பவரை கைது செய்தனர்.

பின்னர் அவரை தஞ்சை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி இளவரசி விசாரணை செய்து குற்றம் சாட்டப்பட்ட ரமேஷ்சுக்கு 2 வழக்குகளுக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவு பிறப்பித்தார்.


Next Story