பாதுகாப்பு பணிக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு சிறை; கடலூர் கோர்ட்டு தீர்ப்பு


பாதுகாப்பு பணிக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு சிறை; கடலூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 30 Sept 2023 12:15 AM IST (Updated: 30 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆக்கிரமிப்பை அகற்றும் பணிக்கு பாதுகாப்பு வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

கடலூர்

பாதுகாப்பு வழங்க ரூ.5 ஆயிரம்

சேத்தியாத்தோப்பு தெற்கு மெயின் ரோட்டை சேர்ந்தவர் மனோகரன் (வயது 60). இவருக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதையடுத்து மனோகரன், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார்.

இதையடுத்து மனோகரன், தனது இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று அப்போது(கடந்த 2011-ம் ஆண்டு) சேத்தியாத்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கே.பிரபாகரனிடம்(64) மனு கொடுத்தார். அதற்கு அவர், பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என்றார்.

3 ஆண்டு சிறை

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மனோகரன், இதுகுறித்து கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். இதையடுத்து கடந்த 21.7.2011 அன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரைப்படி மனோகரன் சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்திற்கு சென்று, அங்கிருந்த இன்ஸ்பெக்டர் கே.பிரபாகரனிடம் ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கே.பிரபாகரனை கைது செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.பிரபாகரனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி என்.பிரபாகர் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாலரேவதி ஆஜராகி வாதாடினார்.


Next Story