மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் 2 வாலிபர்களுக்கு 3 ஆண்டு சிறை


மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் 2 வாலிபர்களுக்கு 3 ஆண்டு சிறை
x

கொடைக்கானலில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் 2 வாலிபர்களுக்கு 3 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்

கேரள மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கொடைக்கானலுக்கு வந்தார். அப்போது கொடைக்கானல் லாஸ்காட் சாலையில் உள்ள தனியார் ஓட்டல் முன்பு அவர் தனது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓட்டலுக்கு சென்றார்.

பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கேரள சுற்றுலா பயணி, கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், 2 வாலிபர்கள் கேரள சுற்றுலா பயணியின் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், மோட்டார் சைக்கிளை திருடியது திருப்பூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 28), மதுரையை சேர்ந்த பரத் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு கொடைக்கானல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி கார்த்திக், இன்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி, குற்றம்சாட்டப்பட்ட பாலகிருஷ்ணன், பரத் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.


Next Story