3½ ஆண்டு தலைமறைவாக இருந்தவர் கைது
3½ ஆண்டு தலைமறைவாக இருந்தவர் கைது
திருப்பூர்,
திருப்பூரில் நீதித்துறையை அவதூறாக விமர்சித்து வீடியோ வெளியிட்ட நபரை 3½ ஆண்டுகளுக்கு பிறகு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நீதித்துறை குறித்து அவதூறு
திருப்பூர் மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதித்துறை மீது அவதூறாக பேசி யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்டது தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு அப்போதைய திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி அல்லி திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதுபோல் தாராபுரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டாக இருந்த சசிகுமார் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் இந்த இரு வழக்குகளும் திருப்பூர் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டன. இந்த வழக்கில் மொத்தம் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதில் 11 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். முக்கிய நபரான பாலசுப்பிரமணியன் என்கிற பாலா (வயது 49) என்பவர் தலைமறைவாக இருந்தார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
தலைமறைவாக இருந்தவர் கைது
சி.பி.சி.ஐ.டி.கோவை சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், திருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் பாலசுப்பிரமணியன் திண்டுக்கல் மாவட்டம் ஜம்பலியம்பட்டியில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று வீட்டுக்குள் இருந்த பாலசுப்பிரமணியனை பிடித்தனர். 3½ ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை பிடித்தனர். இவர் நீதித்துறையை விமர்ச்சித்து நூல்கள் மற்றும் யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்டு இருந்தார். பின்னர் போலீசார் நேற்று கைது செய்து பாலசுப்பிரமணியனை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.