மோட்டார் சைக்கிள் திருடிய 3 வாலிபர்கள் கைது
ஆம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 30). அங்குள்ள ஐ.டி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு இவரது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளில் ஜி.பி.ஆர்.எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதால் மோட்டார் சைக்கிள் ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் உள்ளதாக பெருமாள் செல்போனில் காட்டியுள்ளது. இதையடுத்து ஆம்பூர் பகுதிக்கு விரைந்த பெருமாள் மற்றும் அவரது நண்பர்கள் இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதந்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மோட்டார் சைக்கிளை மீட்டனர். இது குறித்து பெருமாள் அளித்த புகாரின் பேரில் மோட்டார் சைக்கிளை திருடியதாக பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த 18 மற்றும் 19 வயது வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வாணியம்பாடி உதயேந்திரம் பகுதியை சேர்ந்த ஆனந்த் வினேஷ் (வயது 25) என்பதும், ஆம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நகை, மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து உமராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆனந்த் வினேசை கைது செய்தனர். அவரிடம் இருந்த 6 பவுன் நகை மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.