வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது
மயிலாடுதுறையில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறையில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா புழக்கம் அதிகரிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதால் 40 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
ரகசிய தகவல்
இருந்த போதிலும் கஞ்சா விற்பனை செய்துவருவதை முழுமையாக தடுக்க முடியவில்லை. செம்பனார்கோவில் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட விளநகர் கிராமத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸ் சூப்பிரண்டு நிஷாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில், மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது விளநகர் மெயின்ரோட்டைச் சேர்ந்த சக்திவேல் மகன் விஷ்வா (வயது22) என்பவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
3 வாலிபர்கள் கைது
இதையடுத்து விஷ்வா மற்றும் அவரது கூட்டாளிகளான செம்பனார்கோவில் மெயின்ரோட்டைச் சேர்ந்த சுரேஷ் மகன் ஆகாஷ் (22), கீழையூர் மேல வீதியைச் சேர்ந்த மணிகண்டன் மகன் அய்யப்பன் (23) ஆகிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட 3 வாலிபர்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.