காதலிக்க வற்புறுத்தி பள்ளி மாணவியை கடத்தி வீட்டில் அடைத்து வைத்த 3 வாலிபர்கள் கைது
காதலிக்க வற்புறுத்தி பள்ளி மாணவியை கடத்தி வீட்டில் அடைத்து வைத்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறிஞ்சிப்பாடி,
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது மாணவி. 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு மாணவி அருகே உள்ள கடைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கல்குணம் கிராமத்தை சேர்ந்த சிவகுமார் மகன் மனோஜ்குமார்(வயது 25) என்பவர் தனது நண்பர்களான தயாளன் மகன் வடிவேலன்(19), செந்தில் மகன் சுரேஷ்(21) ஆகியோருடன் சேர்ந்து மாணவியை வழிமறித்து, வாயில் துணியை வைத்து கடத்திச் சென்று ஒரு வீட்டுக்குள் அடைத்து வைத்தார். பின்னர் மனோஜ்குமார் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதனிடையே கடைக்கு சென்ற மாணவி நள்ளிரவு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்களது மகளை பல்வேறு இடங்களில் தேடினர். இதையறிந்த மனோஜ்குமார் உள்ளிட்ட 3 பேரும் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர்.
வாலிபர்கள் 3 பேர் கைது
இதற்கிடையே வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மாணவி அங்கிருந்து தப்பி வந்து தனது பெற்றோரிடம் தான் கடத்தப்பட்டது குறித்து கூறி கதறி அழுதுள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, மனோஜ்குமார், வடிவேலன், சுரேஷ் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.