கூரியர் மூலம் கடத்திய 30 கிலோ புகையிலை பறிமுதல்
பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு கூரியர் மூலம் கடத்திய 30 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்:
பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு கூரியர் மூலம் கடத்திய 30 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புகையிலை கடத்தல்
வெளி மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் குமரி மாவட்டத்துக்கு கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் நூதன முறையில் கூரியர் மூலமும் போதை பொருட்கள் கடத்துவது அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள கூரியர் சர்வீஸ் அலுவலகங்களில் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து, கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நாகர்கோவில் வடசேரி போலீசாருக்கு தலைமை தபால் அருகே உள்ள ஒரு கூரியர் சர்வீஸ் அலுவலகத்தில் புகையிலை பொருட்கள் அடங்கிய பார்சல் கடத்தி கொண்டு வரப்பட்டுள்ளதாக நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட கூரியர் அலுவலகத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.
2 பேர் கைது
அங்கிருந்த ஒரு பார்சலை ஆய்வு செய்தபோது, அதில் இடம்பெற்றிருந்த முகவரி போலியாக இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அதனை பிரித்து பார்த்தபோது, அதில் 30 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இந்த புகையிலை கடத்தலில் ஈடுபட்டது திருவாரூர் மாவட்டம் சேர்ந்தமங்கலத்தை சேர்ந்த நடராஜன் (வயது34) மற்றும் விருதுநகர் மாவட்டம் கருப்புகோட்டையை சேர்ந்த விஜய் ஆனந்த் (44) என்பது தெரியவந்தது. இவர்கள் பெங்களூருவில் இருந்து போலியான முகவரி கொடுத்து கூரியர் மூலம் புகையிலை பாக்கெட்டுகளை நாகர்கோவிலுக்கு அனுப்பியுள்ளனர்.
பின்னர் அதை பெற்று செல்வதற்காக நாகர்கோவிலுக்கு வந்துள்ளனர். இதையடுத்து நடராஜன், விஜய் ஆனந்த் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 30 கிலோ புகையிலை பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.