தமிழகத்தில் 30 லட்சம் டன் அரிசி உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது


தமிழகத்தில் 30 லட்சம் டன் அரிசி உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
x

தமிழகத்தில், 30 லட்சம் டன் அரிசி உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

தஞ்சாவூர்


தமிழகத்தில், 30 லட்சம் டன் அரிசி உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

பேட்டி

தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் பகுதியில் உள்ள சமுத்திரம் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

30 லட்சம் மெட்ரிக் டன் அரிசி பாதிப்பு

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் 3½ லட்சம் ஏக்கரில் கருகத்தொடங்கி விட்டது. 1½ லட்சம் ஏக்கரில் மட்டுமே நிலத்தடி நீரை நம்பி சாகுபடி தொடரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காவிரி இன்றி 30 லட்சம் மெட்ரிக் டன் அரிசி உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறுகிறார்கள்.

குறுவையை இழந்த விவசாயிகள் சம்பா பணியையும் தொடங்க முடியாமல் நம்பிக்கை இழந்து உள்ளார்கள். மேட்டூர் அணையில் 60 அடிக்கு கீழே தண்ணீர் குறைந்து விட்டது. கர்நாடகா அணைகளில் நிரம்ப தண்ணீர் இருந்தும் பெற்றுத்தர தமிழ்நாடு அரசு வாய் திறக்க மறுக்கிறது. இதனால் நடப்பாண்டு தமிழ்நாட்டில் 30 லட்சம் மெட்ரிக் டன் அரிசி உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கழிவுநீர் கலப்பு

காவிரி உள்பட அனைத்து ஆறுகளிலும் கழிவு நீர் கலந்து வருகிறது. குறிப்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி பார்த்தால் காவிரியில் கர்நாடக மாநிலத்தில் 38 சதவீதம் மட்டுமே கழிவுநீர் கலப்பதாகவும், 62 சதவீத கழிவு நீர் தமிழ்நாட்டுக்குள் ஓடக்கூடிய இடங்களில் கலப்பதாகவும் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

தஞ்சையில் உலகப்பிரசித்தி பெற்ற ராஜராஜ சோழனால் வெட்டப்பட்ட சமுத்திரம் ஏரி, ஆன்மீக தலமான தஞ்சை மாரியம்மன் கோவில் அருகே அமைந்துள்ளது. தஞ்சை மாநகராட்சியில் வெளியேற்றக்கூடிய பாதாள சாக்கடை கழிவுநீர் முழுமையும் இந்த ஏரிக்கு கால்வாய் அமைத்து கலக்க செய்கிறார்கள்.

இதனால் ஒட்டுமொத்த சமுத்திரம் ஏரி கழிவுநீர் குட்டையாக காட்சியளிக்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக கழிவு நீர் கலப்பதை தடுப்பதற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சத்தியாக்கிரக போராட்டம்

தமிழக அரசின் வேளாண் துறை, விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய மானிய சலுகைகள் நிறுத்தி வைத்துள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 15-ந்தேதி சென்னையில் சத்தியாக்கிரக போராட்டத்தை தொடங்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் காவலூர் செந்தில்குமார், செயலாளர் பாட்ஷா ரவி, மாநகர செயலாளர் அறிவு ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story