30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி


30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி
x

நாகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் கூறினார்.

நாகப்பட்டினம்

நாகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் கூறினார்.

கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனை

நாகையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட வருவாய் அலுவலர் பேபி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் அங்குள்ள கைத்தறி துணி ரகங்களை அவர் பார்வையிட்டார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தமிழக அரசின் தலைமை கூட்டுறவு நிறுவனமான "கோ-ஆப்டெக்ஸ்" கடந்த 88 ஆண்டுகளாக தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பாரம்பரியமான துணி ரகங்களை இந்தியா முழுவதும் உள்ள "கோ-ஆப்டெக்ஸ்" விற்பனை நிலையங்கள் மூலமாக அனைவரும் பயன்பெறும் வகையில் விற்பனை செய்து வருகிறது.

நெசவாளர்களின் வாழ்வாதாரம்

நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர முக்கிய பங்களிப்பு அளித்து வருகிறது. காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளை கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் "கோ-ஆப்டெக்ஸ்" சேலைகள் மற்றும் இதர ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

கோ-ஆப்டெக்ஸ் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி விற்பனை நடைபெற்று வருகின்றது. இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், காஞ்சீபுரம், ஆரணி, திருபுவனம் போன்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், கால்மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ரூ.50 லட்சம் விற்பனை இலக்கு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை விற்பனை நிலையத்திற்கு ரூ.50 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் கனவு நனவு திட்டத்தின்படி, வாடிக்கையாளர்களின் மாதந்தோறும் ரூ.300 முதல் ரூ.5000 வரை 11 மாத தவணைகள் மட்டும் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்டு 12-வது மாத தவணைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்துவதுடன் கூடுதல் சேமிப்புடன் பருத்தி மற்றும் பட்டு ரக துணிகளை வாங்கி பயன்பெறலாம்.

30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி

இங்கு தீபாவளி பண்டிகையையொட்டி 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கும் தவணை முறை கடன் விற்பனை வசதியும் செய்யப்படுகிறது.

எனவே, அனைத்து துறை ஊழியர்களுக்கும் கைத்தறிக்கு கைகொடுத்து உதவிட வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவன முதுநிலை மண்டல மேலாளர் சாந்தாராம், நாகை விற்பனை நிலையம் மேலாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story