உசிலம்பட்டியில் மெக்கானிக் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை
உசிலம்பட்டியில் மெக்கானிக்கின் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டியில் மெக்கானிக்கின் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
கார் மெக்கானிக்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட மாருதி நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(வயது 30). இவர் கார் மெக்கானிக்காக உள்ளார். இவருடைய வீட்டின் அருகே ஆனந்தராஜின் பாட்டியும் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது பாட்டிக்கு உடல் நிலை சரி இல்லை என்பதால் ஆனந்்தராஜ் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பாட்டி வீட்டுக்கு தூங்க சென்று விட்டார்.
நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 30 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்தை காணவில்லை.
நகை, பணம் கொள்ளை
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை திறந்து அதில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக ஆனந்தராஜ், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று தடயங்களை சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதே மாருதி நகர் பகுதியில் ஓய்வு பெற்ற பொறியாளர் வீடு மற்றும் ஜவுளி வியாபாரி வீடு என 2 வீடுகளிலும், மலைப்பட்டியில் தொழிலதிபர் வீட்டிலும் என கடந்த ஒன்றரை மாதத்தில் 3 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் தொடர் திருட்டு சம்பவம் நடந்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.