பல்கலைக்கழக உதவி பேராசிரியர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை


பல்கலைக்கழக உதவி பேராசிரியர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 22 Sep 2022 7:00 PM GMT (Updated: 22 Sep 2022 7:01 PM GMT)

சின்னாளப்பட்டியில், வீட்டின் பூட்டை உடைத்து பல்கலைக்கழக உதவி பேராசிரியர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்திகிராமம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் ராஜாக்கண்ணு (வயது 36). இவர் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் தற்காலிக உதவி பேராசிரியராக உள்ளார். இவருடைய மனைவி சியாமளாதேவி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து வருவதற்காக நேற்று முன்தினம் மாலையில் ராஜாக்கண்ணு வீட்டை பூட்டிவிட்டு மதுரைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் மனைவி குழந்தைகளுடன் நேற்று காலை 7 மணி அளவில் வீட்டுக்கு திரும்பிய அவர், வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருப்பதை பார்த்து பதற்றமடைந்தார்.

30 பவுன் கொள்ளை

உடனே வீட்டின் உள்ளே சென்று அவர் பார்த்த போது பீரோவில் இருந்த 30 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றது தெரியவந்தது. நல்லவேளையாக மற்றொரு பீரோவை கொள்ளையர்களால் திறக்க முடியவில்லை. அதனால் அதில் இருந்த 5 பவுன் நகை தப்பியது.

இதையடுத்து அம்பாத்துரை போலீசுக்கு ராஜாக்கண்ணு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு அருண்கபிலன் நேரில் வந்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார்.

வலைவீச்சு

அதைத்தொடர்ந்து மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்துவிட்டு சாலையில் இறங்கி சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர்.

அதன் பின்னர் ராஜாக்கண்ணு கொடுத்த புகாரின் பேரில் அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். உதவி பேராசிரியர் வீட்டில் 30 பவுன் நகைகள் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story