லாரியில் கடத்தி வரப்பட்ட 30 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
லாரியில் கடத்தி வரப்பட்ட 30 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திருமயம்:
திருமயம் அருகே நமணசமுத்திரம் பகுதியில் திருமயம் தாசில்தார் பிரவீனா மேரி மற்றும் அதிகாரிகள் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை மறித்து சோதனை நடத்தினர். அப்போது காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த லாரி ஒன்றை சந்தேகத்தின் பேரில் தாசில்தார் பிடித்து சோதனை நடத்தினர். அதில் லாரியில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. லாரி டிரைவரிடம் விசாரித்தபோது காரைக்குடி பகுதியில் இருந்து ரேஷன் அரிசி நாமக்கல் பகுதியில் உள்ள கோழி பண்ணைகளுக்கு கொண்டு செல்வதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து லாரியுடன், 30 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து நமண சமுத்திரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனிடையே நேற்று காலை திருமயம் குடோனுக்கு ரேஷன் அரிசி மூட்டைகள் லாரியுடன் அனுப்பி வைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நமண சமுத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.