கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில் 300 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின


விக்கிரமங்கலம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில் பயிரிடப்பட்டிருந்த 300 ஏக்கர் விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

அரியலூர்

கொள்ளிடம் ஆறு

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள முத்துவாஞ்சேரி, சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூர், அரங்கோட்டை, அணைக்குடி போன்ற கிராமங்கள் கொள்ளிடம் ஆற்றை ஒட்டி அமைந்துள்ள ஊர்களாகும். தற்போது மேட்டூரில் இருந்து 65,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் கொள்ளிடம் ஆற்றின் கரைகளையொட்டி பயிர் செய்துள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளில் கொள்ளிடம் நீர் சூழ்ந்துள்ளது.

குறிப்பாக முத்துவாஞ்சேரி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் செல்லும் தண்ணீர் அதனை இணைக்கும் மருதையாற்றின் வழியாக சென்று விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அங்கு பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

300 ஏக்கர் தண்ணீரில் மூழ்கின

இதேபோல் சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூர், அரங்கோட்டை, அணைக்குடிவரை 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள விவசாய பயிர்கள், சம்பா பருவ நாற்றங்கால், பருத்தி மற்றும் நடவு செய்துள்ள இருவாரங்களான நெற்பயிர்கள் போன்றவை தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் இப்பகுதி விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

மேலும், அரங்கோட்டை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தின் அமைந்துள்ள அணைக்குடி கிராமத்தில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

இழப்பீடு வழங்க கோரிக்கை

இதேபோல் அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் தொடக்கப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு அங்குள்ள கிராம மக்கள் அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த பயிர்களை கணக்கெடுத்து சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story