செஞ்சி பகுதியில் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 300 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
செஞ்சி பகுதியில் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 300 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
செஞ்சி,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பத்மநாபன், இளங்கோவன், பிரசாத், கதிரவன், கொளஞ்சி, மோகன் ஆகியோர் கொண்ட குழுவினர் செஞ்சியை அடுத்த அப்பம்பட்டு மற்றும் செஞ்சி பேரூராட்சி பகுதியில் திருவண்ணாமலை சாலை, விழுப்புரம் சாலை, கடைவீதி ஆகிய இடங்களில் உள்ள பழக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 2 கடைகளில் ரசாயன கற்கள் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 300 கிலோ மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் அழுகிய நிலையில் இருந்த சுமார் 200 கிலோ வாழைப்பழங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
தொடர்ந்து ரசாயன முறையில் மாம்பழங்களை பழுக்க வைத்த 2 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டதுடன், பழங்களை இயற்கையாக எப்படி பழுக்க வைக்க வேண்டும் என பழக்கடை உரிமையாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. இந்த ஆய்வின் போது செஞ்சி பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் பார்கவி, துப்புரவு பணியாளர்கள் உடன் இருந்தனர்.