தூத்துக்குடி கடலில் படகில் கடத்தப்பட்ட 300 கிலோ கஞ்சா சிக்கியது
தூத்துக்குடிகடலில் படகில் கடத்தப்பட்ட 300 கிலோ கஞ்சா சிக்கியது
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் போலீசார் ரோந்து சென்றபோது, படகில் கடத்தப்பட்ட 300 கிலோ கஞ்சா சிக்கியது.
தீவிர கண்காணிப்பு
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதனை தடுப்பதற்காக கடலோர காவல்படையினர், கடலோர பாதுகாப்பு போலீசார் மற்றும் உளவுப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து சுமார் 80 கடல்மைல் தொலைவில் சந்தேகப்படும்படியாக சென்ற படகை தூத்துக்குடி கடலோர காவல்படைபினர் ரோந்து கப்பல் 'வஜ்ரா'வில் சென்று மடக்கி பிடித்தனர்.
300 கிலோ கஞ்சா சிக்கியது
தொடர்ந்து கடலோர காவல்படையினர் அந்த படகில் சோதனை செய்தபோது, அதில் கஞ்சா கடத்தப்பட்டது தெரியவந்தது. படகில் சுமார் 300 கிலோ கஞ்சாவை மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடலோர காவல்படையினர் அந்த கஞ்சா மூட்டைகள் மற்றும் கடத்திய சிலரையும் பிடித்து கரைக்கு கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்கள் கரைக்கு வந்த பிறகே முழுவிவரங்கள் தெரியவரும். இந்த சம்பவத்தால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.