இ-சேவை மையம் மூலம் விரைவில் 300 சேவைகள் வழங்கப்படும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
இ-சேவை மையம் மூலம் விரைவில் 300 சேவைகள் வழங்கப்படும் என்று ஈரோட்டில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில், ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இ-ஆபிஸ் மற்றும் இ-சேவை தொடர்பான ஆய்வுக்கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் நாகரத்தினம், ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பேசினார்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ், நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
ஐ.டி. துறையில் 7 துறைகள் இணைந்துள்ளன. கடந்த ஓராண்டில், இந்த துறையில் ஏற்பட்ட மாற்றம் குறித்தும், பேப்பர் இல்லாத 'இ-ஆபீஸ்' நிர்வாகம் குறித்தும் ஆய்வு செய்துள்ளோம். 'இ-ஆபீஸ்' நிர்வாகத்தில் அலுவலர்கள் எந்த இடத்தில் இருந்தும் பணி செய்ய முடியும். தாமதம், சிரமம் தவிர்க்கப்படும். அதிகமான மரங்கள் அழிக்கப்படுவது தவிர்க்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 30 முதல், 35 டன் பேப்பர் தேவை. 'இஆபீஸ்' மூலம், இவை குறைக்கப்படும். இதற்காக பயிற்சி வழங்கி உள்ளோம்.
இ-சேவை மையம்
இசேவை மைய செயல்பாட்டில், 200-க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகிறது. விரைவில், 300 சேவையாக உயர்த்த உள்ளோம். என்.ஐ.சி.யிலும் தரம் உயர்த்தி உள்ளோம்.
பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்படும் 'எமிஸ்' பதிவில் சிறிய புகார்கள் வருகிறது. அதனையும் உடனுக்குடன் தீர்க்கும் தொழில் நுட்பத்தை புகுத்தி வருகிறோம். ஈரோட்டில் உள்ள ஐ.டி. துறை சார்ந்தவர்கள், பொறியாளர்களை ஒருங்கிணைத்து, பிற மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைவதுபோல, இங்கு அமைப்பது குறித்து அடுத்த முறை ஆய்வு செய்கிறோம். ஏற்கனவே, 7 மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய மாவட்டங்களில் விரைவில் ஏற்படுத்தப்படும்.
தமிழகம் அறிவுசார் மாநிலமாக உள்ளது. சென்னைக்கு அடுத்து கோவை, சேலம் என 'டயர் 2' மற்றும் ஈரோடு போன்ற 'டயர் 3' நகரங்களிலும் தகவல் தொழில் நுட்ப பூங்கா ஏற்படுத்த முயற்சிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.