தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 300 கடைகளுக்கு அபராதம்
தஞ்சை புறநகர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த 300 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அதன்படி தஞ்சை புறநகர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா?. என தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவானந்தம் ஆகியோர் தலைமையில் விளார் ஊராட்சி மன்ற தலைவர் மைதிலி ரத்தினசுந்தரம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தம்பி என்ற ரத்தினசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
300 கடைகளுக்கு அபராதம்
ஒவ்வொரு கடையாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டதோடு சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. விளார் பகுதியில் மட்டும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல, தஞ்சை ஒன்றியம் முழுவதும் 61 ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 300-க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.38 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது துணை வட்டார வளர்ச்சி அதிகாரி சித்ரா, ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.